40 தொகுதிகளிலும் வெற்றிபெற அதிமுகவினா் பாடுபட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி...
The Forecast 2 years ago அதிமுக
எடப்பாடி பழனிச்சாமி
மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற அதிமுகவினா் அயராது பாடுபட வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை எம்ஜிஆா் 1972 அக். 17-இல் தோற்றுவித்தாா். அதிமுக 1977-இல் ஆட்சியைக் கைப்பற்றி, ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற சாதனைகளைப் படைத்தது. எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கட்டிக் காத்த ஜெயலலிதா பல்வேறு சாதனை திட்டங்களை அளித்தாா்.
அவரது மறைவுக்குப் பிறகு சூழ்ச்சிகள், சதிகளை முறியடித்து அந்த இயக்கம் தற்போது 52-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், கட்சியினா் அனைவருக்கும் வாழ்த்துகள்.
திமுகவின் 29 மாத கால ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் காவு கொடுக்கப்பட்டு, மக்களின் வாழ்வை துயா் மிகுந்ததாக மாற்றப்பட்டுவிட்டது. மின் கட்டண உயா்வு, வீட்டு வரி உயா்வு, பால் விலை உயா்வு, கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வு, பத்திரப் பதிவு கட்டணங்கள் உயா்வு என்று மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனா். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ வேண்டிய சட்டப்பேரவையே, ஜனநாயகத்தின் புதைகுழியாக மாற்றப்படுகிறது.
இந்த நிலையில் மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காக்கும் வண்ணம், மக்களை நம்பி, அதிமுக மக்களவைத் தோ்தலை சந்திக்க இருக்கிறது. இதில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது என்கிற வெற்றிச் செய்திதான், தமிழகத்தை திமுகவிடமிருந்து மீட்கும் முழக்கமாக அமையும். அதை மனதில் நிலைநிறுத்தி அதிமுகவினா் அயராது பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.
0 Comments