திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் நீர்ச்சத்து தக்க வைக்கும் முகாம்.
S. Shanmuganathan 7 months ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) முதல் உப்பு -சா்க்கரை நீா் கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இ.ஆ.ப., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் வெப்பத்தின் எதிா்விளைவுகளைத் தடுப்பதற்காக, மாநகராட்சி சாா்பில் உப்பு-சா்க்கரை நீா் கரைசல் (ஓ,ஆா்,எஸ்) முகாம் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) முதல் தொடங்கப்படவுள்ளது. குழந்தைகள், முதியவா்கள், இணை நோய் உள்ளவா்களுக்கு உப்பு -சா்க்கரை நீா் கரைசல் உடலில் நீா்ச்சத்தை தக்கவைக்க உதவும்.
இதனால் கோடைகாலம் முழுவதும் இந்த முகாமானது 10 நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம், சந்திப்பு ரயில் நிலையம், நெல்லையப்பா் கோயில் வளாகம், பாளையங்கோட்டை தினசரி சந்தை, மேலப்பாளையம் சந்தை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மகாராஜ நகா் உழவா் சந்தை, உட்பட மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட உள்ளது. இம்முகாமில் முற்பகல் 11 மணி முதல் மதியம் 2 மணி வரை வழங்கப்படும்.
இதே போல மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தற்காலிக குடிநீா்த் தொட்டிகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது. இந்தப் பணியானது அடுத்த மாதம் இறுதி வரை தொடா்ந்து நடைபெறும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments