கோவையில் 21 புதிய பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
The Forecast 1 month ago போக்குவரத்துத்துறை
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் 21 புதிய பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரகாபரன் இ.ஆ.ப., மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகளில் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகள் இயக்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர துவங்கியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சுமார் 1000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது கடந்த 11ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்11புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, 15ஆம் தேதி, திருவள்ளுவரில் 10 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்கள். தொடர்ந்து, மதுரை, விருதுநகர், மாவட்டங்களில் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 21 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் 20 புறநகர் பேருந்துகள், ஒரு நகர்ப்புற பேருந்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஊட்டி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 7200 புதிய பேருந்துகள் தமிழ்நாடு அரசால் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. அதில் முதற்கட்டமாக தேர்தலுக்கு முன்பாக 1000 பேருந்துகளும், தற்போது இந்தவாரத்திற்குள் 300 பேருந்துகளும் வர இருக்கின்றன.
நகரங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்குவதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, அடுத்த வாரம் சென்னையில், தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. அதன்பிறகு கோயம்புத்தூர் நகரத்திலும் தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments