Loading . . .




வங்கதேச கலவரம் எதிரொலி - ஜவுளித்துறையில் வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்திய வர்த்தகத்தை விரும்புவார்கள்

The Forecast 1 year ago உலக செய்திகள்

கோவை:-

வங்கசேதத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தால், ஜவுளித்துறையில் வெளிநாட்டு வர்த்தகர்கள், இந்தியாவில் வர்த்தகத்தை அதிகப்படுத்த விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜவுளித்துறையில் ஏற்றுமதி மற்றும் தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் பெரிதும் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த வங்கசேதம் கடந்த 1971-ம் ஆண்டு தனி நாடாக உதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிரிழந்த தயாகிகளின் குடும்பத்தினருக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அதன் பின் கடந்த 2018-ம் ஆண்டு  நடந்த மாணவர்கள் போராட்டம் காரணமாக, வங்கதேச அரசு, ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையும் ரத்து செய்தது. 

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்தபடி சுதந்திரபோராட்ட தியாகிகளின் வாரிசுகள், பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், மகளிர், சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் சிட்டாங் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த போராட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். 

இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

அதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே போல் சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். மீதமுள்ள 93 சதவீதம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிட்டது.

இதையடுத்து, டாக்கா, சிட்டாங்பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் போராட்டம் தற்போது மெல்ல மெல்ல ஓய்ந்து வருகிறது.

வங்கதேசத்தில் நடந்த கலவரம் காரணமாக, ஜவுளி துறையில் உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பி உள்ளது. இதனால் ஜவுளி துறையில் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இதுகுறித்து, இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:-

வங்கதேசம் நம்மை விட இரண்டு மடங்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது . தற்போது ஏற்பட்டுள்ள உள்நாட்டு சிக்கல்கள் , இன்னும் 15 முதல் 20 நாட்களில் சரியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இந்த சூழலால், நமக்கு உடனடி பலன்கள் கிடைக்க வாய்ப்பு குறைவு . ஆனால் , நீண்ட கால நோக்கில், வெளிநாட்டு வர்த்தகர்கள், இந்தியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யும் திறன் போன்ற சாதகமான அம்சங்களால் , இங்கு வர்த்தகத்தை அதிகப்படுத்த விரும்புவார்கள். அதே சமயம், நாம் நம்முடைய போட்டித்திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே , வங்கதேச உற்பத்தியாளர்ளுடன் போட்டி போட முடியும்.

அதே போல , நம்முடைய  நூல் மற்றும் துணிகள் வங்கதேசத்துக்கு ஏற்றுமதி ஆவதால், அங்கு விரைவாக இயல்பு நிலை திரும்புவது அனைவருக்கும் நல்லது.

தற்போது மாதம் ஒன்றுக்கு நாம் டாலர் 1.2 முதல் 1.3 பில்லியன் வரை ஏற்றுமதி வர்த்தகம் செய்கிறோம். வங்கதேசம் டாலர் 3.5 முதல் 3.8 வரை வர்த்தகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் ஸ்பின்னிங் மில் மற்றும்  ஓ.இ. மில்ஸ்களின் எண்ணிக்கை 1500 உள்ளன. சுமார் 1.60 கோடி ஸ்பிண்டிஸ் மற்றும் 10 லட்சம் ரோட்டர்கள் உள்ளன. தினமும் 70 லட்சம்  கிலோ நூல்கள் தயார் செய்யப்படுகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தினமும் உற்பத்தி செய்யப்படும் நூலின் மதிப்பு சுமார் ரூ.145 கோடி ஆகும். ரூ.10 கோடி வரை ஜி.எஸ்.டி. கட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் நிலவும் சிக்கல் காரணமாக ஆடைகள் இறக்குமதி குறையும் பட்சத்தில் நூற்பாலைகள் பெரிதும் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

சீனா, வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து நூல் மட்டும் துணி வகைகள் கட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டு ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு சங்கிலி தொடர் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரினாலும்,  உலக அளவில் மந்த நிலையில், உள்நாட்டு உற்பத்தி செலவு பலமடங்கு அதிகரித்தாலும் சர்வதேச உற்பத்தியாளர்களுடன் போட்டி போடுவது சிரமம் ஆகி உள்ளது.

இந்த கலவரத்தால் வங்கதேசத்தில் இருந்து கட்டுபாடின்றி இறக்குமதி செய்யப்படும் ஆடைகளின் வணிகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் கணக்கில் வராமல் இறக்குமதி செய்யப்படும் ஆடைகளின் வணிகமும் குறையும். அப்படி குறைந்தால், தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் பெரிதும் பயன்பெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News