Loading . . .




நம் நாடு பொருளாதார ரீதியாக முன்னேற ஜாதி பாரபட்சத்தை முற்றிலுமாக களைய வேண்டும் : காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி

The Forecast 1 month ago தெலுங்கான

தெலங்கானா மாநிலத்தில் புதன் கிழமை முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக 36,559 அரசு பள்ளி ஆசிரியர்களும், 3414 தலைமை ஆசிரியர்களும் வீடு வீடாக சென்று பணியாற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக புதன்கிழமை முதல் தெலங்கானா மாநிலத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் எனவும் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை ஹைதராபாத் போயனபல்லி காந்தி மையத்தில் தெலங்கானா அரசு ஏற்பாடு செய்திருந்த ஜாதிவாரி சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற எதிர் கட்சி தலைவர்/காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: “தெலங்கானாவில் நடைபெற உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு நாட்டுக்கே ஒரு முன்னோடியாக திகழ வேண்டும். இதில் எந்த கேள்வி கேட்க வேண்டும் என்பதை அதிகாரிகள் தீர்மானிக்க கூடாது. சாமானியர்களே தீர்மானிக்க வேண்டும்.

நாட்டில் ஜாதி அமைப்புகள், மற்றும் ஜாதி வேறுபாடும் உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நம் நாட்டில் உள்ள நிலையை பேசினால், அது நாட்டை கூறுபோடுவது போல் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம், பிசி, எஸ்சி, எஸ்டிக்கள் மற்றும் பெண்கள் குறித்து எத்தனை பேர், எத்தனை குடும்பங்கள் நம் நாட்டில் வசிக்கின்றனர் என்பது தெரியவரும். இந்த கணக்கெடுப்புக்கு பின்னர், யார், யாரிடம் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்பதும் தெரியவரும். அவரவர் பொருளாதார நிலை, கல்வி, வேலை போன்றவை குறித்தும் தெரியவரும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என பாராளுமன்றத்திலேயே நான் தெரிவித்துள்ளேன். கணக்கெடுப்பு நடத்திய பின்னர் உண்மை நிலையை அறிந்து இடஒதுக்கீட்டையும் நாம் மெல்ல எடுத்து விடலாம்.

ஜாதி என்பது அரசியல் முதற்கொண்டு நீதித்துறை வரை உள்ளது. இந்த ஜாதி அமைப்பு சிலரின் தன்னம்பிக்கையை சரித்து விடுகிறது. இதனால் இளைஞர்கள் நம் நாட்டில் முன்னேற முடியாமல் அவதிப்படுகின்றனர். உலகிலேயே எங்கும் இல்லாத ஜாதிகள் நம் நாட்டில் மட்டுமே உள்ளது. ஜாதிகளினால் ஏற்படும் பாரபட்சத்தை நான் உணருகிறேன். நம் நாடு பொருளாதார ரீதியாக முன்னேற ஜாதி பாரபட்சத்தை முற்றிலுமாக களைய வேண்டும் என ராகுல் காந்தி பேசினார். இக்கூட்டத்தில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் பட்டி விக்ரமார்க்கா மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், பிசி, எஸ்சி, எஸ்டி சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

0 Comments

Post your comment here

தெலுங்கான Relateted News

Latest News