தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு.இ.ஆ.ப. அதிரடி நடவடிக்கை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரை
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரையின்படி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மாவட்ட ஆட்சியர், 17 போலீஸார் உட்பட 21 பேர் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடந்தது. மே 22-ம் தேதி போராட்டம் கலவரமாக மாறியதால், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்து ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 18-ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் ஆணையத்தின் அறிக்கை 4 பகுதிகளாக நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 64 பேர் பலத்த காயமும், 40 பேர் லேசான காயமும் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 17 பேர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த் துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் போக, எஞ்சியத் தொகையை வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்கிய ரூ.5 லட்சம் போக, எஞ்சியத் தொகையை வழங்க வேண்டும். கலவரத்தின்போது நிகழ்ந்த ஜஸ்டின் செல்வமிதிஷின் இறப்பை இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன 13 நபர்களுக்கு இணையாக பாவித்து அவரது குடும்பத்தாருக்கு அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரது தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பலத்த காயமடைந்த காவல்துறையைச் சேர்ந்த மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில், “ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, உள்துறை மற்றும் வருவாய் துறைகளின் மூலம் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
0 Comments