Loading . . .




வனவிலங்குகளினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பது தொடர்பாக கலந்துரையாடல் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா ஸாஹு. இ.ஆ.ப.,.

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

வனவிலங்குகளினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில்  இன்று தலைமைச் செயலகத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது 

யானை, காட்டுப்பன்றி, மான், மயில், குரங்கு போன்ற வனவிலங்குகளினால் மேற்குத் தொடர்ச்சி மலையினைஒட்டி உள்ள பகுதிகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நெல், கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி, நிலக்கடலை, வாழை போன்ற உயர் மதிப்புள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து, மாநிலத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டநாட்களிலும், வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டங்களிலும், களஆய்வில் முதலமைச்சர் திட்டஆய்வின்போதும், துறைஅமைச்சர், தலைமைச்செயலாளர், துறைசெயலாளர்களுக்கும் கோரிக்கை வைத்துவருகிறார்கள். இது குறித்து விவசாயிகள் சில உள்ளூர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பயிர்களை காப்பாற்றி வந்தாலும், வனவிலங்கு பாதிப்புக்கு ஒரு  நிரந்தர தீர்வு என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

எனவே, இத்தகைய வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பயிர்களை பாதுகாப்பது எப்படி, சட்டரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க இயலும் என்பது தொடர்பாக, அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள்  தலைமைச் செயலகத்தில் சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

இக்கூட்டத்தில் வனவிலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள், உள்ளூர் பயிர்ப்பாதுகாப்புமுறைகள், மாவட்ட வாரியாக பயிர் பாதிப்பு, இப்பாதிப்பினால் மாறிவரும் பயிர் சாகுபடி முறைகள் போன்ற விபரங்களை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள். தொடர்ந்து, கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், சட்டரீதியான அணுகுமுறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து, வனத்துறை முதன்மைப் பாதுகாவலர் அவர்கள் தனது உரையில், வனத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு, வனங்களில் அமைக்கப்பட்டு வரும் கட்டமைப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். வேளாண்மை – உழவர்நலத்துறை, வனத்துறை அலுவலர்களுடன் விரிவாக கலந்தாலோசித்தபிறகு, தலைமைச் செயலாளர் கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கினார்கள்.

1. 2023-24 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து ஆராய்ந்து, அதற்கான தீர்வினை அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக, கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் (வனவிலங்குகள்) தலைமையில் தனிக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

2. பயிர்களை பாதிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை கணக்கெடுப்புக்காக, வனவிலங்குகளினால் பயிர்பாதிப்பு, விவசாயிகளின் புகார்கள்,  பயிர் சாகுபடி பரப்பு குறைவு மற்றும் மாற்றங்கள் குறித்த புள்ளி விபரங்களை ஆண்டுவாரியாகவும், மாவட்டவாரியாகவும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை உடனடியாக சேகரித்து குழுவுக்கு அளிக்கவேண்டும். 

3. மாவட்டவாரியாக பெறப்படும் புள்ளி விபரங்களை, வனத்துறையினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுடன் ஒப்பிட்டு, வனவிலங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணத்தினை ஆராய்ந்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வனத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

4. மேலும், இக்குழு, உடனடியாக, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு நேரில் சென்று, வனவிலங்குகள் பாதிப்புக்கு அம்மாநிலங்களால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தெரிந்துகொண்டு, அதற்கான அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

5. மேற்காணும்விபரங்களைவிரிவாகஆய்வுசெய்து, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ்நாட்டில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். விவசாயிகளின் இன்னலுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், இப்பணிகள் அனைத்தையும் ஒரு மாதகாலத்திற்குள் முடித்து, உரிய பரிந்துரையுடன் அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு, தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச்செயலர், முதன்மை வனப்பாதுகாவலர்கள், சர்க்கரைத்துறை ஆணையர், வேளாண்மை துறை இயக்குனர், தோட்டக்கலை – மலைப்பயிர்கள்துறை இயக்குனர், வேளாண் பொறியியல்துறை தலைமைப்பொறியாளர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர் முதலானோர் கலந்துகொண்டனர்.


0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News