Loading . . .




எடப்பாடி கையொப்பமிட்டால் மட்டுமே கட்சி பதவி; எம்ஜிஆர், ஜெயலலிதா அளித்த உறுப்பினர் அட்டை செல்லாது: அதிமுக மாவட்ட செயலாளர் பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி

The Forecast 3 years ago அதிமுக

எம்ஜிஆர், ஜெயலலிதா அளித்த உறுப்பினர் அட்டை செல்லாது. எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட அதிமுக உறுப்பினர் அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும்’ என அதிமுக மாவட்ட செயலாளர் ஒருவர் தெரிவித்திருப்பது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று கலசபாக்கத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ மற்றும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி பேசியதாவது: அதிமுகவின் நிரந்தர பொது செயலாளராக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பதவி வகித்து வந்தனர். தற்போது 3வது பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டைகள் வைத்திருப்பீர்கள் என்றால், தற்போது அந்த உறுப்பினர் அட்டைகள் செல்லாது. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டை வைத்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு பதவி வழங்கப்படும். எதிர்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டை அவசியம் ஆகும். ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்களும் கூட மீண்டும் உறுப்பினர்களாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும். 16 வயது உள்ளவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கலாம். இவ்வாறு அவர் பேசினார். கட்சியை தொடங்கி வளர்த்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழங்கிய உறுப்பினர் அட்டை செல்லாது என தூசி மோகனின் பேச்சு அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

0 Comments

Post your comment here

அதிமுக Relateted News