வேட்புமனுவில் தவறான தகவல்: இபிஎஸ் மீது வழக்குப் பதிவு
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி கே. பழனிசாமியின் வேட்பு மனு, பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்கள் தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி சேலம் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யும்படியும் சேலம் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை ஜூன் 6-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல் துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
0 Comments