Loading . . .




கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு - தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு.இ.ஆ.ப

The Forecast 2 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில்  (17.05.2023) தலைமைச் செயலகத்தில், தற்போது தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பல்வேறு துறை அரசு செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழில் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக் கல்வி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மேற்கண்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் வழங்கப்பட்ட அறிவுரைகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., அவர்கள் பின்வருமாறு எடுத்துரைத்தார்.  

கோடைகால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க

செய்ய வேண்டியவை

1. உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.

2. அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லுங்கள்.

3. ஓ.ஆர்.எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.

4. இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள்.

5. நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும்.

6. மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.

7. வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும்.

8. மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்லவும். 

9. உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

செய்யக் கூடாதவை

1. வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.

2. சிறிய குழந்தைகள், கர்பிணிகள், முதியோர்கள் அதிக வெப்பத்தில், மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்கவும்.

மேலும் இக்கூட்டத்தில், துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட குறித்தும் தலைமைச் செயலாளர் அவர்கள் விரிவான அறிவுரைகளை வழங்கினார். இந்த அறிவுரைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தொகுத்து அனைத்து துறைகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், தொடர்ச்சியான ஆய்வுக் கூட்டங்கள் மூலம் இவை பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணித்திட வேண்டியதன் அவசியத்தையும் தலைமைச் செயலாளர் அவர்கள் எடுத்துரைத்தார்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News