ரூ.4,505 கோடி கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்
The Forecast 2 years ago இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான ரூ.4,505 கோடி மதிப்பீட்டிலான 4,802 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 23-ஆவது ஆய்வு கூட்டம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிகழ்நிதியாண்டுக்கான அறிவிப்புகளை விரைந்து நிறைவேற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை 1,000 ஆண்டுகள் பழைமையான 197 கோயில்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருகால பூஜை திட்டத்தில் 200 கோயில்களை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களின் திருப்பணிக்கு 2,500 திருக்கோயில்களை தேர்வு செய்து வழங்க இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயில்களில் அன்னதானத் திட்டத்தை செயல்படுத்தவும், கோயில் சார்பில் நிகழாண்டில் 600 இணைகளுக்கு திருமணம் நடத்தத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம்-காசி ஆன்மிக பயணத்துக்கு நிகழாண்டில் 300 பக்தர்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர். கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்படும். இதுவரை ரூ.4,505 கோடி மதிப்பீட்டிலான 4,802 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் இதுவரை 1,16,886 ஏக்கர் நிலங்கள் அளவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments