Loading . . .




கோவையில் தார்ச்சாலை தரம் பற்றி , தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா இ.ஆ.ப., நேரில் ஆய்வு செய்தார்

The Forecast 2 years ago நகராட்சி நிர்வாகம்

'563 கி.மீ தொலைவிற்கு பாதாள சாக்கடை பணிகளுக்கு அனுமதி' 

கோவை, ஜூன் 8:

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தீபா மில் ரோடு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.09 கி.மீ தொலைவிற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், குமுதம் நகர் பகுதியில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் 1.96 கி.மீ தொலைவிற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலம் சபாபதி வீதி பகுதியில் ரூ.15.83 லட்சம் மதிப்பீட்டில் 213 மீட்டர் தொலைவிற்கு தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, தமிழக அரசின் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தார்ச்சாலையில் துளை போட்டு, அதன் தரம் எப்படி உள்ளது என கண்டறிந்தார். இதுபற்றி மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோரிடம் கேட்டறிந்தார். 

இதன்பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு சாலைப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மாநகராட்சியில் சுமார் 2,500 கி.மீ தொலைவிற்கு சாலைகள் உள்ளன. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்த பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 2022-23, 2023-24 ஆகிய நிதியாண்டுகளில் சுமார் 563 கி.மீ தொலைவிற்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 206 கி.மீ தொலைவிற்கு தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையும். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளில், பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பின்னர் உடனடியாக சிமெண்ட் சாலை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தார்ச்சாலைகளின் சாம்பிள், ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் தரம் உறுதி செய்யப்படும். கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும். கோவையில் செம்மொழி நினைவு பூங்கா ரூ.172 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளது. அதற்கான ஒப்பந்தப்புள்ளி இம்மாத இறுதியில் கோரப்படும். பின்னர் பணிகள் விரைவில் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் இஆ.ப., துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகர பொறியாளர் சுகந்தி, மாநகராட்சி உதவி கமிஷனர்கள் செந்தில்குமரன், சேகர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

நகராட்சி நிர்வாகம் Relateted News