Loading . . .




ரகசிய ஆவண குற்றச்சாட்டு ஆதாரமற்றது டிரம்ப் மறுப்பு

The Forecast 2 years ago உலக செய்திகள்

அரசின் ரகசிய ஆவணங்கள் தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது, கேலிக்கூத்தானது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தார். அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையைவிட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு அவர் வெளியேறியபோது, அரசு ஆவணங்கள் அடங்கிய 15 பெட்டிகளை எடுத்துச் சென்றதாகவும் அதில் சில ஆவணங்கள் ரகசியமானவை என்றும் ஃபுளோரிடா தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஜியார்ஜியா, வடக்கு கரோலினா மாகாண குடியரசுக் கட்சி மாநாடுகளில் பங்கேற்றுப் பேசிய டிரம்ப், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது:

நான் தவறு எதுவும் செய்யவில்லை. இரண்டாவது முறையாக நான் அதிபராகும் வாய்ப்பைத் தடுக்கும் முயற்சியாக நீதித் துறை என் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இந்த வழக்கில் எனக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டால்கூட அதிபர் போட்டியிலிருந்து விலக மாட்டேன்.

பைடன் நிர்வாகத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அமெரிக்க வரலாற்றின் மிகக் கொடூரமான அதிகார துஷ்பிரோயகங்களில் ஒன்றாக இருக்கும்.

அரசு ஆவணங்களை அதிபர் பைடனும், ஹிலாரி கிளிண்டனும்தான் தவறாக கையாண்டனர். ஆனால், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவன் என்பதால் என்னை நியாயமற்ற முறையில் நடத்துகின்றனர் என்றார் டிரம்ப்.

முன்னதாக, ஜியார்ஜியாவில் நடைபெற்ற மாநாட்டுக்கு வந்த டிரம்புக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரகசிய ஆவணங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்குப் பின்னரும் குடியரசுக் கட்சியில் டிரம்புக்கு ஆதரவு அதிகரித்தே வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News