மாதந்தோறும் 2வது செவ்வாய்க்கிழமைகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முகாம்: கலெக்டர் தகவல்
The Forecast 2 years ago திருவள்ளூர்
மாதந்தோறும் 2வது செவ்வாய் கிழமைகளில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முகாம் நடக்கும் என்று திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆகஸ்ட் 2023 முதல் 2024 ஜூன் வரை சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதம் 2வது செவ்வாய் கிழமைகளில் நடக்கவுள்ளது. இதில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் பெறப்படும். இதில் பயனடைய, குடும்பத்தில் ஒன்று அல்லது 2 பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அக்குழந்தை பிறந்து 3 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.2 பெண் குழந்தைகள் மட்டும் எனில் 2வது குழந்தை பிறந்து 3 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். 40 வயதிற்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. வருமான சான்று ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் ரூ.50 ஆயிரம் மற்றும் 2 பெண் குழந்தைகள் இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தைகளின் பெயரிலும் ரூ.25 ஆயிரம் தொகை தமிழ்நாடு மின்விசை நிதி (ம) அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, அதற்கான ரசீது நகல் பெண்குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.இந்த திட்டத்தில் முன்னதாக பதிவு செய்யப்பட்டு தற்போது 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகைக்கு வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும். எனவே முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் மேற்காணும் பயன்களை பெற ஆகஸ்ட் 2023 முதல் 2024 ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் 2வது செவ்வாய் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், இரண்டாம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் என்ற முகவரியிலோ, 044 – 29896049 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்
0 Comments