பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வரும் போது பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலுக்கு ஆதரவாக அணி திரளும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்களும் சண்டைகளும் நிலவி வந்தாலும், இஸ்ரேல் மீது இதுபோன்ற கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதில்லை. வான் மற்றும் தரையிலிருந்து ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்களால் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்துள்ளன.
இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஹமாஸ் படையினரின் தாக்குதலால் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் பிரகடனம் செய்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மோடி தனது பதிவில், "இஸ்ரேல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். தாக்குதலுக்கு உள்ளான அப்பாவி மக்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா இஸ்ரேலுடன் துணை நிற்கும்" என்று கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்ரேல் மற்றும் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நெருங்கிய நட்புறவை பேணி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments