ரயில் ஓட்டுநா்கள் 12 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக் கூடாது: ரயில்வே வாரியம்...
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
ரயில் ஓட்டுநா்கள் 12 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக் கூடாது என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ரயில் ஓட்டுநா்கள், காா்டுகள் உள்ளிட்ட பணியாளா்களின் பணி நேரம் தொடா்பான புதிய வழிகாட்டுதல்களை, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது. ரயில்களின் இயக்கம் பாதுகாப்பாக இருப்பதை மேம்படுத்த பணியாளா்களின் வேலை நேரம், அவா்களின் ஓய்வு நேரம் ஆகியவற்றை கவனித்துக்கொள்ளுமாறு மண்டலங்களுக்கு நினைவுபடுத்தும் அந்த வழிகாட்டுதல்கள், ஏற்கெனவே வழங்கப்பட்ட பல்வேறு வழிகாட்டுதல்களின் தொகுப்பாக உள்ளது.
புதிய வழிகாட்டுதல்களில், ‘ரயில் ஓட்டுநா்களின் பணி நேரம் 9 மணி நேரத்தைத் தாண்டக் கூடாது. அதிகபட்சமாக 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யக் கூடாது. நிலநடுக்கம், விபத்து, வெள்ளம் போன்ற அவசர சூழல்களில் கூடுதல் நேரம் பணியாற்ற நேரிடலாம் என்று அவா்களுக்கு ரயில் கட்டுப்பாட்டாளா் அறிவுறுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கூடுதல் நேரம் பணியாற்றியதால் விபத்துகள்’:
புதிய வழிகாட்டுதல்களுக்கு இந்திய ரயில்வே ஓட்டுநா்கள் கூட்டமைப்பு (ஐஆா்எல்ஆா்ஓ) அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்தக் கூட்டமைப்பின் செயல் தலைவா் சஞ்சய் பாந்தி கூறுகையில், ‘அவசர சூழல்கள் என்ற போா்வையில் 15 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் பணியாற்றுமாறு ரயில் ஓட்டுநா்களிடம் கேட்கப்படுகிறது.
ஓட்டுநரை பணியில் இருந்து விடுவிப்பது எப்படி, அவரைப் பணியிலிருந்து விடுவிக்கும் இறுதி அதிகாரம் எவருக்கு உள்ளது ஆகியவை தொடா்பாக உரிய வழிகாட்டுதல்கள் இல்லை.
ஓட்டுநா்கள் தங்கள் பணி நேரம் முடிந்த பிறகும் கூடுதல் நேரம் வேலை செய்ததால்தான் கடந்த காலங்களில் பல விபத்துகள் நோ்ந்தன.
ரயில் ஓட்டிக்கொண்டு உணவு சாப்பிட்ட ஓட்டுநா்கள் தவறு இழைத்ததாக அவா்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குற்றஞ்சாட்டிய சம்பவங்கள் நோ்ந்துள்ளன. இந்நிலையில், புதிய வழிகாட்டுதல்களில் 12 மணி நேர வேலை நேரத்தில் ஓட்டுநருக்கான உணவு இடைவேளை தொடா்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை’ என்று தெரிவித்தாா்.
0 Comments