சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில், மதர் டெய்ரி நிறுவனம் இந்தியாவின் முதல் இயற்கையாக மண்ணில் மக்கக்கூடிய பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பால் விநியோகத் துறையில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த புதிய பால் பாக்கெட் நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட இந்த பாக்கெட், மண்ணில் இயற்கையாக கரைந்து மக்கக்கூடிய தன்மை கொண்டதாகும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய பாக்கெட்டில் வழங்கப்படும் பால், தரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதியிடல் முறையை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாகவும் இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் ஐந்தாம் தேதி முதல் இந்த மக்கும் பாக்கெட்டுகள் மூலம் பால் விநியோகம் தொடங்கப்படும் என்று மதர் டெய்ரி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய முயற்சி, பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் நோக்கில் முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளதுடன், நிலையான வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளது.
0 Comments