எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இந்தியர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் தொற்று பரவலை தொடர்ந்து இந்த பயண எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு, “புண்டிபுக்யோ” வகை எபோலா வைரஸ் பரவலை தொடர்ந்து சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இதையடுத்து பல நாடுகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், தற்போது அந்த நாடுகளில் உள்ள இந்தியர்கள் அந்நாட்டு சுகாதார வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும், காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் விமான நிலையங்களில் அதிகரிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எபோலா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் திரவங்கள் மூலம் பரவும் ஆபத்தான தொற்றுநோயாக கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கை, நாட்டின் பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை முயற்சிகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
0 Comments