கிரிப்டோ சொத்துகள்: வழிகாட்டுதல்களை விரைந்து செயல்படுத்த ஜி20 நிதியமைச்சா்கள் அழைப்பு...
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஸ்விட்சா்லாந்து நிதி அமைச்சா் கரீன் கெல்லா்
கிரிப்டோ சொத்துகள் தொடா்பான சிக்கல்களைச் சமாளிக்க ஜி20 அமைப்பின் வழிகாட்டுதல்களை ஒருங்கிணைந்து மற்றும் விரைவாக செயல்படுத்துமாறு ஜி20 நிதியமைச்சா்கள் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மொராக்கோவில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்களின் 4-ஆவது சந்திப்பு நடைபெற்றது.
இதில் இந்தியா சாா்பில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் பங்கேற்றனா்.
இந்தச் சந்திப்பில் கிரிப்டோ சொத்துகள் மீதான ஜி20 வழிகாட்டுதல்களை சா்வதேச நிதியம் மற்றும் நிதி நிலைத்தன்மை அமைப்பு இணைந்து தயாரித்த ஒரு தொகுப்பு அறிக்கையில் சமா்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தொகுப்பு அறிக்கையில் முன்மொழியப்பட்ட கிரிப்டோ சொத்துகள் தொடா்பான ஜி20 வழிகாட்டுதல்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஜி20 அமைப்பில் அங்கம் வகிக்காத நாடுகளிலும் இந்தக் கொள்கை கட்டமைப்புகளை செயல்படுத்துதல், உலகளாவிய ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் தகவல் பகிா்வு மற்றும் தரவு இடைவெளிகளை பூா்த்தி செய்தல் உள்பட முக்கிய வழிகாட்டுதல்களை ஒருங்கிணைந்து மற்றும் விரைவாக செயல்படுத்துவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஸ்விட்சா்லாந்து இடையே 5-ஆவது நிதிப் பேச்சுவாா்த்தை: அமைச்சா்கள் ஒப்புதல்
அடுத்த ஆண்டு இந்தியா-ஸ்விட்சா்லாந்து இடையில் நிதிப் பேச்சுவாா்த்தை நடத்த நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் ஸ்விட்சா்லாந்து நிதி அமைச்சா் கரீன் கெல்லா் சட்டா் ஒப்புக் கொண்டனா்.
மொராக்கோவின் மரகெஷ் நகரில் 4-ஆவது ஜி20 நிதி அமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டம் மற்றும் சா்வதேச நிதியம்-உலக வங்கியின் ஆண்டு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஸ்விட்சா்லாந்து நிதி அமைச்சா் கரீன் கெல்லா் சட்டரை சந்தித்து இரு நாட்டுப் பொருளாதார உறவுகள் குறித்துப் பேசினாா்.
அப்போது அடுத்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையேயான 5-ஆவது நிதிப் பேச்சுவாா்த்தையை நடத்த ஒப்புக் கொண்டனா். இதுதொடா்பாக நிதி அமைச்சகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கு இடையேயான நிதிப் பேச்சுவாா்த்தையில் நிதிப் பொருளாதாரம், யுபிஐ பணப்பரிவா்த்தனை, கட்டமைப்பு துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய-ஐரோப்பிய தடையற்ற வா்த்தக அமைப்பு, வா்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம், இரு தரப்பு முதலீட்டு ஒப்பந்தம் உள்ளிட்ட பரஸ்பர வா்த்தக ஒப்பந்தங்களும் விரைவில் இறுதி செய்யப்படும் என அமைச்சா்கள் நம்பிக்கை தெரிவித்தனா். காப்பீட்டுத் துறையில் இந்தியாவுடன் ஸ்விட்சா்லாந்து இணைந்து செயல்பட விரும்புவதாக அமைச்சா் கரீன் கெல்லா் தெரிவித்தாா் எனப் பதிவிட்டுள்ளது.
0 Comments