ரூ.400 காஸ் சிலிண்டர், ஓய்வூதியம் உயர்வு: வாக்குறுதியை அள்ளி விட்ட சந்திரசேகர ராவ்!
The Forecast 2 years ago தெலுங்கான
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 400 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர், தொழில் துவங்க 10 லட்சம் ரூபாய் மானியம், 6 ஆயிரம் ரூபாய் சமூக பாதுகாப்பு பென்சன் என ஏராளமான வாக்குறுதிகளை முதல்வர் சந்திரசேகர ராவ் (பி.ஆர்.எஸ்.,) அறிவித்துள்ளார்
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாரத் ராஷ்டீரிய சமிதி தலைவரும், தெலுங்கானா மாநில முதலவருமான சந்திரசேகர ராவ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை இன்று(அக்.,15) வெளியிட்டார்.
1. அன்னபூர்ணா திட்டம் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் அரிசி வழங்கும் திட்டம்.
2. ஆசரா(ASARA) ஓய்வூதியம் 2000லிருந்து 3000ஆக உயர்த்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் 500 ரூபாய் என மொத்தம் 5 ஆண்டுகளில் 5000 ரூபாயாக உயர்த்தப்படும்.
3. ரூ.400க்கு காஸ் சிலிண்டர்,
4. தொழில் துவங்க 10 லட்சம் ரூபாய் மானியம்,
5. கேசிஆர் பீமா திட்டத்தின் படி 93 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மானியம்
6. 6 ஆயிரம் ரூபாய் சமூக பாதுகாப்பு பென்சன், 15 லட்சம் வரை மருத்துவ காப்பீடு என ஏராளமான வாக்குறுதிகளை முதல்வர் சந்திரசேகர ராவ் (பி.ஆர்.எஸ்.,) அறிவித்துள்ளார்.
மேலும், சந்திரசேகர ராவ் கூறியிருப்பதாவது: கடந்த கால ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத பல திட்டங்கள், அமைச்சரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் கொண்டு வரப்பட்டது. அதேபோல் அளித்த தேர்தல் வாக்குறுதியில் 99சதவீதம் நிறைவேற்றிவிட்டோம்.
சீட் கிடைக்காவிட்டால் யாருக்கும் கவலை வேண்டாம். எம்.எல்.ஏ வேட்பு மனு இறுதியானது அல்ல. எதிர்காலத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளன. சரியாக கட்சி பணியில் ஈடுபடாத சிலரை தவிர மற்ற அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கு சீட் கிடைக்கும் என பலமுறை கூறியிருந்தேன். தேர்தலில் போட்டியிட உள்ள அனைத்து வேட்பாளர்களும் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்.
பெரும்பாலான தொகுதிகளில் வேட்பு மனுவின் போது, சண்டை சச்சரவுகள் இல்லாமல் அனைத்தும் சுமூகமாக நடந்துள்ளது. எந்த ஆத்திரமூட்டும் செயல்கள் நடந்தாலும் வேட்பாளர்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஆத்திரப்படாமல், அனைத்து மக்களிடமும் அமர்ந்து பேசி, பிரச்னைகளை சரி செய்ய, வேட்பாளர்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.
0 Comments