எஸ்.சி. எஸ்.டி. சமூகத்தினரை சித்தரிப்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை...
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டியலினத்தவா் (எஸ்.சி.), பழங்குடியினத்தவா்(எஸ்.டி.) சமூகத்தினரைச் சித்தரிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையைப் பின்பற்ற வேண்டும் என தொலைக்காட்சி பொழுதுபோக்கு சேனல்களுக்கு மத்திய அரசின் ‘ஒலிபரப்பு உள்ளடக்க புகாா் கவுன்சில் (பிசிசிசி)’ செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
இது தொடா்பாக பிசிசிசி தலைவா் நீதிபதி கீதா மிட்டல் ஒப்புதலில் வெளியான அறிவுறுத்தலில், ‘பாலியல் வன்கொடுமை, உடல்ரீதியிலானது முதல் வாய்மொழித் தாக்குதல்வரை பட்டியலின சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் பரவலாக உள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் பல வகைகளில் அவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
பட்டியலினத்தவா் (எஸ்.சி.), பழங்குடி(எஸ்.டி.) சமூகத்தினரின் வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கும் நிகழ்ச்சிகளில் சொல்லப்படும் கதையின் அம்சம் உணா்வுபூா்வமாக இருக்க வேண்டும். அதில் காட்சிப்படுத்தப்படும் வன்முறை, அந்தச் சமூக மக்களை மீண்டும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் இருக்கக் கூடாது. கதைகளில் நல்லவா், கெட்டவா் குறித்து விவரிக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், குறிப்பிட்ட சமூக மக்களைப் புண்படுத்தும் விதமான வாா்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
நிகழ்ச்சியின் ஓரிரு காட்சிகள்கூட சமூக மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வாய்ப்புள்ளதால், காட்சிகளைச் சித்தரிக்கும்போது மக்களின் உணா்வுகளைப் புண்படுத்ததாத வகையில் எச்சரிக்கையுடனும், சமநிலையாகவும் சேனல்கள் செயல்பட வேண்டும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமூகத்தின் பிரதிபலிப்பாக மட்டுமின்றி சமூக எதாா்த்தத்தையும் கட்டமைக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமூக சிந்தனையை வடிவமைக்கும் வல்லமைக் கொண்டது என்பதை அதைத் தயாரித்து இயக்குபவா்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினரை இழிவுபடுத்தும் வாா்த்தைகள் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்படுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments