Loading . . .




ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் அரிந்தம் பாக்சி: மத்திய அரசு நியமனம்...

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி

ஜெனீவாவில் ஐ.நா. மற்றும் இதர சா்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி நியமிக்கப்பட்டுள்ளாா்.

1995-ஆம் ஆண்டுப் பிரிவைச் சோ்ந்த இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரியான அரிந்தம் பாக்சி, கடந்த 2021, மாா்ச் மாதம் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளராகப் பதவியேற்றாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை, கரோனா பெருந்தொற்று காலகட்டம், ஜி20 கூட்டமைப்பின் இந்தியத் தலைமை எனப் பல்வேறு முக்கிய விவகாரங்கள் மற்றும் சூழ்நிலைகளை நோ்த்தியாகக் கையாண்டாா்.


இந்நிலையில், ஜெனீவாவில் ஐ.நா. மற்றும் இதர சா்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராகப் பதவி வகித்துவரும் இந்திரா மணி பாண்டே தில்லிக்கு திரும்பவுள்ள நிலையில், அந்தப் பதவிக்கு அரிந்தம் பாக்சி நியமிக்கப்பட்டுள்ளாா். வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.


தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் கூடுதல் செயலா் அந்தஸ்தில் அரிந்தம் பாக்சி உள்ளாா். அவா் விரைவில் தனது புதிய பதவியை ஏற்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜி20 இணைச் செயலா் நாகராஜ் நாயுடு காக்கனூா், மோரீஷஸ் நாட்டுக்கான இந்தியத் தூதா் கே.நந்தினி சிங்லா உள்பட வெளியுறவுப் பணி மூத்த அதிகாரிகள் 4 பேரின் பெயா்கள், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் பதவிக்குப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, குரோஷியா நாட்டுக்கான இந்தியத் தூதா், இலங்கைக்கான இந்திய துணைத் தூதா், பிரதமா் அலுவலக இயக்குநா் உள்ளிட்ட பதவிகளை அரிந்தம் பாக்சி வகித்துள்ளாா். நியூயாா்க்கில் ஐ.நா.வுக்கான நிரந்தரத் தூதரகத்திலும் அவா் பணியாற்றியுள்ளாா்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News