இந்தியாவுக்கு எதிராக ராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா: அமெரிக்கா கடும் எச்சரிக்கை
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
இந்தியாவுக்கு எதிராக ராணுவ பலத்தை சீனா அதிகரித்துள்ளது. அதனால் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து டெல்லியில் ஆலோசனை நடக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சீனாவுடன் மோதல் ஏற்பட்டது. இதில், 19 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அப்போது மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது, ‘லடாக் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த சுமார் 38,000 சதுர கி.மீ நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 5,180 சதுர கி.மீ நிலப்பரப்பை சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963-ன் படி சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்துள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள இந்தியா-சீனா கிழக்கு எல்லை பகுதியில் சுமார் 90,000 சதுர கி.மீ பகுதியும் தன்னுடையது என சீனா சொந்தம் கொண்டாடுகிறது’ என்றார்.
இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின்னர் இந்தியாவும் சீனாவும் 20 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. 20வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 9, 10ம் தேதிகளில் நடந்தது. இதில் இருநாடுகளுமே எல்லைகளில் பாதுகாப்பு படைகளை கணிசமாக விலக்கி கொள்ள வேண்டும் என ஒப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்படியே நமது ராணுவம் எல்லைகளில் கணிசமான பாதுகாப்பு படையினரை விலக்கி கொள்ளவும் செய்தது. இந்நிலையில் தற்போது, அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சீனா குறித்த முக்கிய தகவல்கள் வருமாறு:
500 அணு ஆயுதங்களை செயல்பாட்டில் சீனா வைத்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் சீனா வசம் இருக்க போகும் அணு குண்டுகள் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிக்கும். 2022ல் புதியதாக 3 ஏவுகணை தளங்களை சீனா கட்டி முடித்துள்ளது. இந்த ஏவுகணை தளங்களில் 300 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஏவுகணை இலக்கு 5,500 கி.மீ. தொலைவு.
இது அமெரிக்காவுக்கும் பேராபத்தாகவே அமையும். மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, நைஜீரியா, நமீபியா, மொசாம்பிக், பங்களாதேஷ், பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் ராணுவ தளங்களை அமைக்க சீனா மும்முரம் காட்டுகிறது. சீனா கடற்படையில் 370க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. கடந்தாண்டு சீனா வசம் இருந்த போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் எண்ணிக்கை 340. வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 395 ஆகவும் 2030க்குள் 435 ஆகவும் அதிகரிக்க சீனா திட்டமிட்டுள்ளது. தைவானை ஆக்கிரமித்து கைப்பற்றும் நோக்கத்தில் சீனாவின் முப்படைகளும் முழு வீச்சில் களமிறங்கி உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் லடாக் கல்வான் பள்ளத்தாக்கு, பான்காங் ஏரி பகுதிகளிலும் பூட்டான் டோக்லாம் பீடபூமி பகுதியிலும் சீனா தமது ராணுவ நடவடிக்கையை அதி தீவிரப்படுத்தியுள்ளது. புதியதாக போர் விமான தளங்கள், ராணுவ ஹெலிகாப்டர் தளங்கள், ராணுவ குடியிருப்புகளை சீனா கட்டமைத்துள்ளது. இந்த இரு பகுதிகளிலுமே இந்தியா-சீனா இடையே ராணுவ மோதல் நிகழ்ந்து பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியவை. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டே இத்தகைய ராணுவ நடவடிக்கைகளை சீனா தீவிரமாக்கியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
0 Comments