ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி (தேமாக) தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கிறது
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இண்டியா கூட்டணி சார்பில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. நட்பு ரீதியில் 5 தொகுதிகளில் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டது. பாஜக தனித்து போட்டியிட்டது. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய அக்கட்சி மீதமுள்ள 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது.
வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே, தேசிய மாநாடு அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஜம்மு பகுதியில் உள்ள தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்தது. இறுதி நிலவரப்படி, தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த கூட்டணி காஷ்மீரில் புதிய அரசை அமைக்க உள்ளது.
ஜம்மு பிராந்தியத்தில் மொத்தம் உள்ள 43 தொகுதிகளில் பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு, ஆம் ஆத்மி தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. 7 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஜம்மு - காஷ்மீரின் புதிய முதல்வராக தேசிய மாநாடு கட்சியின் துணைதலைவர் உமர் அப்துல்லா பதவியேற்பார் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
0 Comments