அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல், மும்பை வோர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
டாடா குழுமத்தின் தலைவராக இருந்த 86 வயதான ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் புதன்கிழமை இரவு காலமானார். இதனையடுத்து மும்பையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. இன்று காலை, அவரது வீட்டில் இருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் தெற்கு மும்பையில் உள்ள என்சிபிஏ எனப்படும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், சிவ சேனா(யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் ரத்தன் டாடாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு இறுதிச் சடங்குக்காக ரத்தன் டாடாவின் உடல் இன்று மாலை வோர்லி மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், அமித் ஷா, பியூஷ் கோயல், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments