தமிழ்நாடு முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாக்கும் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமின் மூலம், மாநிலம் முழுவதும் 43,051 மையங்களில் 52.91 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் தற்காலிக மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஜூன் 28 அன்று அனைத்து மையங்களிலும், ஜூன் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் தற்காலிக மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். அனைத்து மையங்களும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இந்த முகாமின் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பணியில் 2 இலட்சத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.க. அருண்ராஜ், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த சிறப்பு முகாம், ஒவ்வொரு குழந்தையையும் போலியோ நோயிலிருந்து பாதுகாக்கும் பொதுச் சுகாதார முயற்சியாகும். அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளித்து, நோயற்ற எதிர்காலத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
0 Comments