Loading . . .




இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்களுடனான ஆளுநரின் ‘எண்ணித் துணிக' என்ற கலந்துரையாடல்

The Forecast 3 years ago இளைஞர் தேடல்

தமிழ்நாடு , ஆளுநர் மாளிகை சார்பில் (18.12.2022), இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்களுடனான 

ஆளுநரின் ‘எண்ணித் துணிக' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

 (18.12.2022) சென்னை, ஆளுநர் மாளிகையில், இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடும் 'எண்ணித் துணிக' என்ற ஊக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் ஆளுநர் தனது கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் பல்துறை கல்வி பின்புலத்தைச் சேர்ந்த இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களிடையே பேசிய ஆளுநர், "கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் தங்களுடைய பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி அதை ஒரு ‘தவம்’ போல ஈடுபட்டு, வெற்றியை எட்டுவதில் தீர்க்கமாக இருக்க வேண்டும்," என்று அறிவுறுத்தினார்.

ஒரு மாணவரின் கேள்விக்கு பதிலளித்தபோது, தமது பள்ளிப்பருவ காலங்களில் எதிர்கொண்ட கஷ்டங்களை ஆளுநர் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், தற்போது கவனத்தை பரவலாக சிதறடிக்கக் கூடிய நவீனகால தொழில்நுட்பங்களை விட நாளிதழ்கள் மற்றும் புத்தகங்களை அந்தக் காலத்தில் தேடித் தேடிப் படித்ததன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

கற்றுக் கொள்ளும் பாடங்களை சுருக்கமாக எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர தவறா உணர்வு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் கவனிப்பை விழிப்புடன் மனதில் கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ஆலோசனை வழங்கினார். 

அரசுப் பொறுப்பில் உயர் இடங்களை எட்டுவதற்கு இயன்றவரை தங்களுடைய இளமைப் பருவத்திலேயே அரசுப் பணியில் சேர முயற்சிக்க வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தினார். 



இந்த கலந்துரையாடலின் போது, தேசிய கல்விக் கொள்கை-2020, பயங்கரவாத எதிர்ப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்துவதன் முக்கியத்துவம், பாதுகாப்புப் படையில் அக்னி வீரர்களின் சேர்க்கையின் தேவை, முடிவெடுக்கும் திறன்கள் மற்றும் உத்திகள், அறிவுசார் ஞானத்தில் திருக்குறளின் பங்கு, விமர்சன சிந்தனையின் தேவை குறித்து ஆளுநர் பேசினார். 

புவி வெப்பமடைதல், பெருந்தொற்று தாக்கம், காலநிலை மாற்றம், பேரழிவு போன்ற உலக நெருக்கடிக்கான தீர்வுகளைக் கண்டறிவதில் இந்தியாவுக்கு இருக்கும் ஈடுபாடு குறித்தும் ஆளுநர் விளக்கினார். தங்களைச் சுற்றி முன்வைக்கப்படும் விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு வெற்றிக்கான தங்களுடைய முயற்சிகளில் பின்னடைவுகளையும் தோல்விகளையும் இதயத்துக்கு கொண்டு செல்லாமல் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார். 

பிரதமரின் ஆற்றல்மிக்க மற்றும் துடிப்பான தலைமையின் கீழ், இந்தியா ஜி20 தலைமை பதவியை ஏற்றுள்ளதாகவும் அதை முந்தைய காலங்களில் காமன்வெல்த் விளையாட்டுகள் போல் மெகா நிகழ்வாக  நடத்தாமல், நாடு முழுவதும் வெகுஜன நிகழ்வுகளாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். 

வளர்ச்சியடைந்த உலக பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், எதிர்காலத்தில் உலகளாவிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியுடன் வலுவான தலைமையை வழங்கவும் ஜி-20 தலைமை  பதவி இந்தியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று ஆளுநர் கூறினார்.

உலகம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற வசுதைவ குடும்பத்தின் பழங்கால பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துடன் இந்தியாவின் அணுகுமுறை, முன்னெப்போதையும் விட அதிகமாக இந்தியாவை எதிர்பார்க்க உலகை தூண்டியுள்ளது என்றும் ஆளுநர் தெரிவித்தார். 

இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற, அதற்கு தயாராகும் மாணவர்கள், பக்திச் சிரத்தையுடன் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக் கொண்டார்.





தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் வெற்றி அவர்களையும் சமுதாயத்தையும் மாற்றுவதுடன், அது எதிர்கால சந்ததியினரின் நலனுக்கானதாகவும் நாட்டின் விரிவான வளர்ச்சி மற்றும் தேசத்தையும் தன்னிறைவாக்கும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள், ஆர்வத்துடன் ஆளுநருடன் கலந்துரையாடி பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கங்களைப் பெற்றதுடன் பிறருக்கும் தங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், ஆளுநரின் துணைச் செயலர் (பல்கலைக்கழகங்கள்) திரு. எஸ். பிரசன்னா ராமசாமி, ஆளுநரின் ஊடக ஆலோசகர் திரு. திருஞானசம்பந்தம், பயிற்சி மைய ஆசிரியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆளுநர் மாளிகை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


0 Comments

Post your comment here

இளைஞர் தேடல் Relateted News