ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல்: வைகோ, ராமதாஸ் கண்டனம்
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல்: வைகோ, ராமதாஸ் கண்டனம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நாட்டின் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனமான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்களை கல்வித் துறையில் மட்டுமின்றி, அரசியல் பொருளாதாரத் துறையிலும் ஒளிரச் செய்து வருகிறது. இங்கு இந்திய நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் நிலைப் பெற பல்வேறு சித்தாந்தங்கள் பற்றிய கருத்தியல் விவாதங்கள் நடப்பதும், சமூகநீதி,பெண்ணுரிமை, சமத்துவம், மதச் சார்பின்மை மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட கோட்பாடுகள் பற்றி மாணவர்களிடையே கருத்தரங்கம், பயிலரங்கம் நடப்பதும் பல ஆண்டுகளாக தொடர்கின்றன
2014 இல் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்த பின்னர் ஜேஎன்யூ இந்துத்துவ மத வெறிக் கும்பலின் கொடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி மற்றும் இந்துந்துவ அமைப்பினர் ஜேஎன்யூவில் அத்து மீறி நுழைந்து, முற்போக்கு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யும் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், குறிப்பாக இஸ்லாமிய, தலித் மாணவர்களை இலக்காக வைத்து வன்முறையை ஏவுவதும் தொடர் நிகழ்வுகள் ஆகி விட்டன. இதற்கு ஜேஎன்யூ நிர்வாகமும் துணை போகிறது.
நேற்று (பிப்.19 ) ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30 க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏபிவிபி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பேரணியின் போது தமிழகத்தைச் சேர்ந்தோர் உள்ளிட்ட மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை கண்டிக்கத்தக்கவை! பல்கலைக்கழக வளாகங்களில் நீதி கேட்டு போராடும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது; அதை தடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
0 Comments