டெல்லியில் இன்று சமூக நீதிக்கான தேசிய மாநாடு - திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்பு
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று (ஏப். 3) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளது. அவர் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக மாநாட்டில் உரையாற்றுகிறார்.
டெல்லி இந்தியா கேட் அருகில் இன்று மாலை 4.30 முதல் 7 மணிவரை நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க உள்ளனர்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்துக்கான தேசியக் கூட்டுத் திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது
சமூக நீதியை நிலைநாட்ட வலிமையான அரசியல் இயக்கம் அவசியம் என்பதை உணர்ந்த அண்ணா 1949-ல் திமுக-வைத் தொடங்கினார். அப்போதிலிருந்து 74 ஆண்டுகளுக்கும் மேலாக, சமூக நீதி, திராவிட இனம், மொழி, கலை, பண்பாடு, நாகரிகத்தின் பெருமைகள், பாரம்பரியத்தைப் பாதுகாத்து வருகிறது திமுக. அண்ணாவைத் தொடர்ந்து, கருணாநிதியும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களும் சமூக,பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையவும் பல திட்டங்களை செயல்படுத்தினார்.
அவரது வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறைகளின் வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களின் மேம்பாடு, அனைத்து சமூகமும் உயர்வு என்ற நோக்குடன் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார்
தமிழகத்தில் சமூகநீதி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அரசால் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவி, பதவி உயர்வு, நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி முறையாகவும், முழுமையாகவும் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறது.
0 Comments