Loading . . .




தமிழக தலைவர்களின் மோதல் தீவிரமடைகிறது அண்ணாமலை பற்றி அமித்ஷாவிடம் புகார்: கர்நாடகா தேர்தலில் 5 சீட் கேட்கும் அதிமுக; அடுத்த வாரம் டெல்லி செல்கிறார் எடப்பாடி

The Forecast 3 years ago பாஜக



 அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மோதல் முற்றியுள்ளநிலையில், அமித்ஷா, நட்டா ஆகியோரிடம் அண்ணாமலை பற்றி தம்பித்துரை மூலம் புகார் செய்யப்பட்டுள்ளது. அதோடு கர்நாடகா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 5 சீட் கேட்டுள்ளனர். இந்தநிலையில் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அடுத்த வாரம் டெல்லி செல்கிறார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அண்ணாமலை மேலிடத்தை மிரட்டும் வகையில் பேசினார்.


அதன்பின்னர் அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது அதிமுக குறித்தும், கூட்டணி குறித்தும் அண்ணாமலையின் பேட்டியை தொகுத்து வீடியோவாக தயாரித்த எடப்பாடி பழனிசாமி, அதை இந்தியில் மொழி பெயர்த்தார். பின்னர் அதை தனியாக ஒரு சிடி தயாரித்து, தம்பிதுரை மூலம் இரு நாட்களுக்கு முன் அமித்ஷாவிடம் வழங்கினர். பின்னர் நேற்று முன்தினம் நட்டாவை சந்தித்து அந்த சிடியை தம்பித்துரை வழங்கினார்.


அப்போது அண்ணாமலையை உடனடியாக மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியின் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக எடப்பாடியின் கைக்கு வந்து விட்டது. அதை பாஜ அங்கீகரிக்கும் வகையில், கர்நாடகா தேர்தலில் பாஜவுக்கு ஆதரவு அளிக்கத் தயார். ஆனால் 5 சீட் அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி கேட்டுள்ளார். இதை தம்பித்துரை மூலம் தெரிவித்தார். அதற்கு விரைவில் தகவல் தெரிவிக்கிறோம் என்று அமித்ஷா கூறியுள்ளார்.


கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. இதனால் கொஞ்சமாக ஓட்டு வைத்துள்ள கட்சிகளைக் கூட பாஜக தனது அணியில் சேர்த்து வருகிறது. கர்நாடகாவில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவில் உள்ளனர். இதனால், திமுக, அதிமுக, பாமகவுக்கு அங்கு செல்வாக்கு உள்ளது. அதில் அதிமுக, பாமகவின் ஆதரவைப் பெற அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இதற்காகத்தான் எடப்பாடியிடம் அமித்ஷா சில நாட்களுக்கு முன்னர் பேசி ஆதரவு கேட்டார். போனில் ஆதரவு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளார்.


அதிமுகவுக்கு 3 சீட்டு முதல் 5 சீட்டுகள் வரை கொடுத்தால் வெளிப்படையாக ஆதரவு கொடுக்கத் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதோடு, பாஜவே தனது அணிக்கு சீட் வழங்கினால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை தனக்கு வழங்கிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இதற்காகத்தான் சீட்டு கேட்டு வருகிறார். மேலும் பாஜவுக்கு குறிப்பிட்ட அளவுக்கு தேர்தல் செலவையும் ஏற்கத் தயார் என்றும் எடப்பாடி அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதனால் அமித்ஷா, அதிமுகவுக்கு சீட் வழங்குவாரா அல்லது எடப்பாடி பழனிசாமியை மிரட்டி ஆதரவு மட்டும் கேட்பாரா என்ற பரபரப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. இதற்கு பதிலடி ெகாடுக்கும் வகையில் தங்கள் அணி தனித்துப் போட்டியிடும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதனால் பாஜக யாருடைய ஆதரவை பெறுவது என்று குழம்பி வருகிறது. அதேநேரத்தில் அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். கடந்த சில மாதங்களாக அனுமதி அளிக்காமல் இருந்த அமித்ஷா, கர்நாடகா தேர்தலால் எடப்பாடியை சந்திக்க அமித்ஷா ஒப்புக் கொண்டார்.


இந்த சந்திப்புக்குப் பிறகு அதிமுக ஆதரவு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அப்போது சீட் ஒதுக்கீடும் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதை தடுக்கும் வகையில்தான் பன்னீர்செல்வம் கர்நாடகாவில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அதிமுகவில் மோதலும் முடிந்தபாடில்லை. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் உடனடியாக பாஜ மேலிடம் பரிசீலிக்குமா என்பதும் தெரியவில்லை. இதனால் பாஜக மேலிட முடிவைப் பொறுத்த எடப்பாடி-அண்ணாமலை மோதல் மற்றும் அதிமுக அணிகளுடனாக மோதல் முடிவுக்கு வரும். அது இந்த கர்நாடகா தேர்தலுக்கு முன் முடிவுக்கு வருமா என்ற பரபரப்பு தற்போது எழுந்துள்ளது.


அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று காலை 10:05 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், திடீரென சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அதற்காக அண்ணாமலை நேற்று காலை 9:20 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். அப்போது, ‘அண்ணாமலை, எனக்கு விமானத்திற்கு நேரமாகிவிட்டது. போர்டிங் குளோஸ் பண்ணி விடுவார்கள். எனவே நான் போய்விட்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு, அவசரமாக விமான நிலையத்திற்குள் சென்று விட்டார். பிரதமர் மோடி இன்று சென்னை வர இருக்கின்ற நிலையில், அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்களுடன் வரவேற்பு அளிப்போம் என்று கூறி வந்த அண்ணாமலை, தற்போது அவசரமாக டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Post your comment here

பாஜக Relateted News

Latest News