இந்தியாவின் பாதுகாப்புக்கு அடுத்த அச்சுறுத்தல்: கிளிநொச்சி ராணுவ முகாமில் சீன கண்காணிப்பு மையம்; தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு ஆபத்து
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரச் சீனா கடுமையாக முயன்று வருகிறது. இதற்கு முட்டுக்கட்டையாக இந்தியா விளங்குகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படை, விஞ்ஞானம், ஏவுகணை தயாரிப்பு என பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு போட்டியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. அதே நேரத்தில் சீனாவுக்கு எதிரியான அமெரிக்கா மற்றும் ரஷ்யா இந்தியாவுடன் நல்ல நட்புறவை மேம்படுத்த விரும்புகிறது. இது, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் இந்தியாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக சீனா கவனித்து வருகிறது. இதற்காக இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனா அவ்வப்போது தனது உளவு கப்பல்களை அனுப்பி வருகிறது. இந்தியாவை மிக எளிதில் கண்காணிக்க சீனாவுக்கு இலங்கை முக்கிய இடமாக உள்ளது.இதனால், இலங்கையை தன் வலையில் வீழ்த்த அவர்களுக்கு பல ஆயிரம் கோடி கடன்களை வழங்கி, அந்த நாட்டின் முக்கிய துறைமுகமான ஹம்பாந்தோட்டை துறைமுகம் பகுதிகளை சீனா குத்தகைக்கு எடுத்து உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியால் திவால் நிலைக்கு சென்ற இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்தது. இது, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் இலங்கைக்கு மேலும் கடன்களை வழங்குவதாக அறிவித்து, நெருக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டது. இலங்கையின் பொருளாதார சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்கும் சீனா, ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு உளவு கப்பல்களை அனுப்பி வருகிறது.கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை இலங்கைக்கு சீனா அனுப்பியது. இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனா உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்திருந்தது. இந்த உளவு கப்பல் மூலம் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களை சுமார் 750 கி.மீ தூரத்துக்கு மேல் கண்காணிக்க முடியும். இதனால், இஸ்ரோ ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டா, மகேந்திரகிரி, ஒடிசா ஏவுகணை தளம் உள்ளிட்ட மையங்களை கண்காணிக்க முடியும். இந்த கப்பலால் தென் மாநிலங்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும். இந்தியா சரியாகத் தனது ஏவுகணைகளைச் சோதனை செய்யும் போது இந்த கப்பலைச் சீனா அனுப்பியது. இந்திய ஏவுகணைகளின் ஆற்றலை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது. இதனால், சீனா உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.இந்த விவகாரத்தால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கூட அப்போது மனக்கசப்பு ஏற்பட்டது. இருந்தும், கடந்தாண்டு டிசம்பர் மாதம் மீண்டும் அதே யுவான் வாங் 5 கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. இந்திய பெருங்கடலில் தொடர்ந்து அச்சுறுத்தலை உருவாக்கி வரும் சீனா, இலங்கையின் கிளிநொச்சி ராணுவ முகாம் அருகே கண்காணிப்பு மையம் அமைக்க உள்ளது. இதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது, இந்தியாவுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments