சூழலியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையிலான மோதலை இந்தியா நம்பவில்லை” - பிரதமர் மோடி
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ 50-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச புலிகள் கூட்டமைப்பையும் (ஐபிசிஏ) பிரதமர் தொடங்கி வைத்தார். “அமிர்த காலத்தில் புலிகளின் பாதுகாப்பு” என்ற புலிகள் காப்பக மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டின் 5-வது பருவ அறிக்கைகளை வெளியிட்ட பிரதமர், புலிகளின் எண்ணிக்கையை அறிவித்ததோடு, அகில இந்திய புலிகள் மதிப்பீட்டின் (5வது பருவ) அறிக்கையையும் வெளியிட்டார். புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, புலிகளுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். புலிகள் பாதுகாப்புத் திட்டம் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் முக்கிய நிகழ்விற்கு அனைவரும் சாட்சியாக இருப்பதாகவும், இத்திட்டத்தின் வெற்றி இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், முழு உலகிற்கும் பெருமை சேர்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். புலிகளின் எண்ணிக்கை குறைவதைத் தடுத்ததோடு, புலிகள் நன்கு வாழக்கூடிய சுற்றுச்சூழலை இந்தியா வழங்கியுள்ளது என்றும் பிரதமர் கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டில், உலகிலுள்ள 75% புலிகள் இந்தியாவில் இருப்பதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவிலுள்ள புலிகள் காப்பகங்கள் 75 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருப்பதோடு, கடந்த பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளில், நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 75 சதவிகிதம் அதிகரித்திருப்பதும் தற்செயலான நிகழ்வு என்றும் பிரதமர் கூறினார்.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து எப்படியென உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்களின் மனதில் கேள்வி எழுந்துள்ளதாகக் கூறியப் பிரதமர், அதற்கான பதில் இந்தியாவின் பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் மறைந்துள்ளதாகக் கூறினார். "சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் இடையிலான மோதலை இந்தியா நம்பவில்லை, இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்திய வரலாற்றில் புலிகளின் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களில் புலிகளின் ஓவியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். மத்திய இந்தியாவைச் சேர்ந்த பரியா சமூகத்தினர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒர்லி சமூகத்தினர் உள்ளிட்டோர் புலியைத் தெய்வமாக வணங்குவதாகவும், இந்தியாவிலுள்ள பல சமூகங்கள் புலியை நண்பனாகவும், சகோதரனாகவும் கருதுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், துர்க்கை, ஐயப்பன் போன்ற தெய்வங்கள் புலி மீது சவாரி செய்வதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
0 Comments