சபரிமலையில் ரூ.4,000 கோடியில் புதிய விமான நிலையம் - மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
சபரிமலை அருகே எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. இது ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல செய்தி என்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, சபரிமலையில் விமான சேவையும் தொடங்கப்பட உள்ளது.
சபரிமலை அருகே கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் அரசு, தனியார் பங்களிப்பில் 2,250 ஏக்கர் பரப்பளவில் ரூ.4,000கோடியில் விமான நிலையம் கட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின்பல்வேறு துறைகளிடம் கேரள அரசு தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு துறை ஏற்கெனவே முதல்கட்ட அனுமதியை வழங்கிவிட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்து துறையும் சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘சபரிமலை அருகே புதிதாக பசுமை விமான நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.4,000 கோடி மதிப்பில் 2,250 ஏக்கர் பரப்பில் அரசு, தனியார் பங்களிப்பு திட்டத்தில் புதிய விமான நிலையம் கட்டப்படும். கேரள அரசின் தொழில் வளர்ச்சி கழகம், விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments