காலை 6-10 மணி வரையும், மாலை 6-10 மணி வரையும் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கூடுதலாக 20% கட்டணம்? மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி; பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதலாக 20% கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்து, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கட்டண உயர்வுக்கு பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு வலுக்க தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் மின்சார பயன்பாடு வழக்கமாக அதிகமாக இருக்கும். காரணம் அலுவலகம் சென்று திரும்பியவர்கள், கல்லூரி, பள்ளிகளுக்கு சென்று திரும்பியவர்கள் ஓய்வெடுப்பது மற்றும் படிப்பது மாலை நேரத்தில்தான் அதிகம். அதாவது வீடுகளில் மொத்த மின்சார பயன்பாட்டில் 70 சதவீதம் என்பது காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலுமான 8 மணி நேரத்தில் தான் நடைபெறுகிறது.இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான 7 மணி நேரத்தில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் மின்சாரம் கூட பயன்படுத்துவது இல்லை. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில் வழக்கமான மின்சார கட்டணம் தான் வசூலிக்கப்படும். ஒவ்வொரு வீடுகளிலும் இதய துடிப்பு நேரம் என்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை தான் என்று சொல்லலாம். அதாவது காலையில் எழுந்து காலை உணவு தயாரிப்பது, அலுவலகத்துக்கு புறப்படுவது, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களை தயார் செய்வது என்று ஒவ்வொரு வீடும் ரொம்ப பிஸியாக இருக்கும். இதே போல மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அலுவலகத்துக்கு சென்றவர்கள் திரும்புவது. வீட்டில் ஓய்வு எடுப்பது.பொழுது போக்குக்காக டிவி பார்ப்பது, சமையல் செய்வது, வாஷிங் மிஷினில் துணி துவைப்பது போன்ற பணிகள் நடைபெறும். இந்த நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டால் இல்லத்தரசிகள் பாடு பெரும் திண்டாட்டம். அந்த அளவுக்கு இந்த நேரத்தில் மின் தேவை என்பது ரொம்ப அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் அவசர தேவை மற்றும் நெருக்கடிகளை ஒன்றிய அரசு வேறுவிதமாக பயன்படுத்தி அதை பணமாக்க பார்க்கிறது. அதாவது, இந்த நேரத்தில் மின்சாரம் பயன்படுத்தினால் வழக்கமாக விதிக்கப்படும்
கட்டணத்துடன் கூடுதல் கட்டணத்தை விதிக்க ஒன்றிய மின்துறை முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்றார்போல் மின் நுகர்வோர் உரிமை விதிமுறைகளில் 2 திருத்தங்களை செய்ய உள்ளது. அதில் ஒன்று, நேரத்துக்கு ஏற்ற மின் கட்டண பட்டியல், ‘ஸ்மார்ட் மீட்டர்’ விதிமுறைகளை எளிமையாக்குதல்.இதுகுறித்து ஒன்றிய மின் துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின் கட்டணத்தை கணக்கெடுக்க ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்திய பிறகு விவசாயத்துக்கு மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் தவிர மற்ற அனைத்து நுகர்வோர்களுக்கும் நேரத்திற்கு ஏற்ற மின்சார கட்டணத்தை அமல்படுத்துவதற்காக விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி 10 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்ட தேவை கொண்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நேரத்திற்கு ஏற்ப 20 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.10 கிலோ வாட்டுக்கு குறைவான மின் தேவை கொண்டவர்களுக்கும், வீடுகளுக்கும் 2025ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நேரத்திற்கு ஏற்ப மின் கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தும் மின்சார கட்டணம் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். மின்சார கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தும். இது பொதுமக்கள் மீது திணிக்கப்படும் ஒன்றிய அரசின் கடும் தாக்குதல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஒன்றிய அரசு அறிவித்துள்ள, இந்த நேரத்தில் தான் மின்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது. அதில் போய் கை வைத்தால் காலையில் வீட்டில் உள்ளவர்கள் எவ்வாறு அலுவலகத்துக்கு செல்ல முடியும். மாணவர்களை எப்படி தயார் செய்து பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது. மின்சார பயன்பாடு குறைவான நேரத்தில் எந்த வேலையும் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் பொதுமக்கள் குமுற தொடங்கியுள்ளனர். ஏற்கனவே, அத்தியாவசிய பொருட்கள் விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.இந்த நிலையில் மின் கட்டணத்தை அதிரடியாக 20 சதவீதம் உயர்த்தப்படும் என்பது எவராலும் ஏற்று கொள்ள முடியாது. இந்த கட்டண உயர்வு என்பது பொதுமக்கள்,தாக்குப் பிடிக்க முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அதிக மின் பயன்பாட்டு நேரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது மின்துறை அமைச்சராக தங்கமணி இருந்தபோது தான் ஒன்றிய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு இணைந்தது.அதன்பின்னர் ஒன்றிய அரசின் அனைத்து முடிவுகளையும் மாநில அரசுகள் பின்பற்றி வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அதற்கு காரணம், உதய் திட்டத்தின்படி மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் நிலக்கரி அளவீடு கொடுக்க மறுப்பது, ஒன்றிய அரசின் மின் பங்கீட்டை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டது. இதனால் மின் தட்டுப்பாடு ஏற்படும். இதை தவிர்க்கவே மாநிலங்கள் ஒன்றிய அரசின் நெருக்கடிக்கு பணிந்து விலையை ஏற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போதும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு நெருக்கடி கொடுப்பதால் மாநிலங்களுக்கு தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.* தமிழகத்துக்கு பாதிப்பில்லை மின்சார வாரியம் விளக்கம்
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள நுகர்வோர் உரிமைகள் திருத்தங்கள் அடிப்படையில் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மாலைநேர உச்சகாலங்களில் 20 சதவீதம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது விதி. தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உள்ளது. தற்போது உள்ள மின் கட்டண ஆணைப்படி உச்சநேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, இந்த திருத்தத்தால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல, ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு அபராத தொகை ஏதும் நிர்ணயம் செய்யப்படாததால் நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
0 Comments