பொது சிவில் சட்டம் | “மதப் பிரச்சினையை அதிகமாக்க பிரதமர் மோடி முயற்சி” - முதல்வர் ஸ்டாலின்
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
மதப் பிரச்சினையை அதிகமாக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கருதிக் கொண்டிருக்கிறார்” என்று பொது சிவில் சட்டத்துக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் வலியுறுத்தல் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், “மணிப்பூர் மாநிலம், இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி ஆளுகிற மாநிலம். அந்த மணிப்பூர் மாநிலம் கடந்த 50 நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. 150 பேர் இதுவரை பலியாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதுவரை பிரதமர் அந்தப் பக்கமே போகவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட 50 நாட்களுக்குப் பிறகுதான் அமித் ஷா நடத்தி இருக்கிறார். இதுதான் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் லட்சணம்.
இந்த லட்சணத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று சொல்லி இருக்கிறார். எனவே, ஒரு நாட்டினுடைய சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டும். மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார் நம்முடைய மோடி. எனவே மதப் பிரச்சினையை அதிகமாக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர் கருதிக் கொண்டிருக்கிறார்.
நான் உறுதியோடு சொல்கிறேன், நிச்சயமாக உறுதியாக வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடத்தை மக்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். தயாராகி விட்டார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மேலும், பாட்னா கூட்டத்துக்கு பிறகு மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், பாஜகவிற்கு சரியான பாடத்தை வழங்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்றும் பேசிய முதல்வர் ஸ்டாலின், குடும்ப அரசியல் குறித்து பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார்
0 Comments