ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசுத் தலைவர் உடனடியாக நீக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
ஆளுநர் ஆர்.என். ரவியை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிஷ் திவாரி வலியுறுத்தி உள்ளார்.
மணிஷ் திவாரி பேட்டி: இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதாலேயே அவர் குற்றவாளி அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. ஒரு வழக்கில் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், அதுவும் ஒரு காவல்துறை ஆவணம் மட்டுமே. குற்றம் இழைத்ததாக காவல்துறை நம்பும் விஷயங்களைக் கொண்ட ஆவணம் அது.
அமைச்சராக ஒருவரை நியமிப்பதற்கான அதிகாரம் முதல்வருக்கே இருக்கிறது. அதேபோல், அமைச்சரை நீக்கும் அதிகாரமும் முதல்வருக்கே இருக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய நடவடிக்கை, அவர் லட்சுமண ரேகையை கடந்த செயல். இது சட்டப்படியான நடவடிக்கை அல்ல. தனது எல்லை எது என்பது ஆளுநருக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தனது எல்லை எது என்று தெரியவில்லை. இப்படி ஒரு சட்டவிரோத நடவடிக்கையை அவர் எடுத்திருக்கக்கூடாது. தான் அறிந்திருக்க வேண்டிய அரசியல் சாசன அறிவை அவர் அறிந்திருக்கவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. அவரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உடனடியாக ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
நடவடிக்கையை திரும்பப் பெற்ற ஆளுநர்: முன்னதாக, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பி உள்ள கடிதத்தில், "அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, அட்டர்னி ஜெனரலை நான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவர் தனது கருத்தை தெரிவிக்கும் வரை, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments