தற்போதைய நிலையில் பொது சிவில் சட்டம் தேவையற்றது என்று காங்கிரஸ் மீண்டும் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற வியூக குழு கூட்டம், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மணிப்பூர் வன்முறை, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை கூட்டத்தொடரில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற வியூக குழு கூட்டத்துக்குப் பின்னர், அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பொது சிவில் சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
பொது சிவில் சட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை கடந்த ஜூன் 15-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அந்தச் சட்டம் தொடர்பான காங்கிரஸின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. தற்போதைய நிலையில், அந்தச் சட்டம் தேவையற்றது. அந்தச் சட்டம் தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு விவாதம் நடைபெற்றால், அதில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தெரிவித்தார்.
0 Comments