Loading . . .




அவசர சட்ட மசோதா 110 சதவீதம் நிறைவேற்றப்படும்; மத்திய மந்திரி கோயல்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

டெல்லி அரசின் அதிகார குறைப்பு அவசர சட்ட விவகாரத்திற்கு, ஆம் ஆத்மி மற்றும் சில எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. டெல்லியில் அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் செய்கிற அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தபோது, இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என கடந்த மே மாதம் 11-ந்தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.

எனினும், இந்த விவகாரத்தில், தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, எல்லா முடிவுகளையும், கூட்டத்தில் ஆஜராகிற பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தீர்மானிக்க வேண்டும். இதற்கு உறுப்பினர் செயலாளர் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

அவசர சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தால், முதல்-மந்திரி தன் விருப்பப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசின் பிரதிநிதியாக திகழ்கிற துணை நிலை கவர்னருக்கு மீண்டும் அதிகாரம் அளிப்பதற்கு இந்த அவசர சட்டம் வகை செய்கிறது.

இந்த அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநில தலைவர்களை சந்திக்க ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் கடந்த மே 23-ந்தேதியில் இருந்து, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறார்.

அதன்படி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகருக்கு கடந்த மே 23-ந்தேதி சென்று, அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேசினார். கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மன் மற்றும் ஆம் ஆத்மியின் பிற தலைவர்களும் சென்றிருந்தனர். தொடர்ந்து, முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் இந்த அவசர சட்ட மசோதா பற்றி செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த சட்டம் 110 சதவீதம் நிச்சயம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். நாட்டுக்கு எது நன்மையோ அதற்கு எப்போதும் அதிக ஆதரவு இருக்கும் என கூறியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், மணிப்பூர் கலவரம், டெல்லி அவசர சட்ட மசோதா விவகாரம் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சிகள் கிளப்ப தயாராக உள்ளன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News