உச்ச நீதிமன்றத்திற்கு 42 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டது. இதிலும் பல்வேறு விடுமுறை கால அமர்வுகள் நியமிக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. விடுமுறை கால அமர்வில் மொத்தம் 2,149 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இவற்றில், சமூக ஆர்வலர் டீஸ்டா செடால்வட் சரணடைவதில் இருந்து ஒருவாரம் விலக்கு அளிக்கப்பட்டது உள்ளிட்ட 700 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து உச்ச நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டு, வழக்கம் போல் செயல்பட உள்ளது. முக்கிய வழக்குகள் பல இன்று விசாரணைக்கு வர உள்ளன. குறிப்பாக, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் மணிப்பூரில் உள்ள சிறுபான்மை மக்களான குக்கி பழங்குடியினருக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கு மற்றும் மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வருகிறது.குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் ஆண்களுக்காக தேசிய ஆணையம் அமைக்கக் கோரிய பொது நல மனுவும் விசாரணைக்கு வருகிறது. வழக்குகளை அவசரமாக பட்டியலிடுவதற்கும், விசாரணை செய்வதற்கும் தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட புதிய நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. ஒரே பாலின திருமண விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது.
0 Comments