Loading . . .




இணைய சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகள்: ஜூலை 13-இல் உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை

The Forecast 3 years ago நீதித்துறை

சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்குகளை இறுதி

விசாரணைக்காக ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தமிழக அரசு நிறைவேற்றிய இணைய சூதாட்ட தடைச்

சட்டத்தை எதிர்த்து, விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகளில், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்ட இந்த சட்டம் செல்லுபடியாகக் கூடியது. பொது அமைதி,சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக வேலையில்லாத இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், போலீஸ் என 32 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 'ஆன்லைன் ரம்மி'

விளையாட்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தஹி, 'ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரள ஆகிய மாநில அரசுகள், 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டுக்கு தடை விதித்த சட்டத்தை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன.

அதனை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகளில் எந்த இடைக்கால உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. தற்போது, இணைய

விளையாட்டுகளை அதிர்ஷ்ட விளையாட்டு எனவும், அதற்கு பலர் அடிமையாகி,

நிதி இழப்புகளை சந்தித்து, தற்கொலைகள் செய்து கொள்வதாகவும் கூறி தமிழக அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில், கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என வாதிட்டார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், 'ஏற்கெனவே தடை கோரி இரண்டு மணி நேரம் வாதிடப்பட்டது. அதை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. எனவே, இறுதி விசாரணைக்கு ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும்' என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், வழக்குகளை இறுதி விசாரணைக்காக ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


0 Comments

Post your comment here

நீதித்துறை Relateted News