2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த கூட்டணி கணக்கு மட்டும் போதாது, ஆளும் கட்சிக்கு எதிராக சிறந்த கருத்தாக்கத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் எதிர்க் கட்சிகள் கூட்டணி தேர்தல் பலனை அறுவடை செய்ய முடியும்' என்று தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து சமூக ஆர்வலராக மாறியுள்ள பிரசாந்த் கிஷோர் செவ்வாய்க்கிழமை கூறினார். 2024-ஆம் ஆண்டு
நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை
ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித்
தலைவருமான நிதீஷ் குமார் தலைமையில், அம்மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க் கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் அண்மையில்
நடைபெற்றது. 17 எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலில்
எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது. எதிர்க் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் வரும்17,18-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரசாத் கிஷோர் அளித்த பேட்டி:ஆளும் கட்சிக்கு எதிராக மக்களைத் திருப்பும் வகையில் சிறந்த கருத்தாக்கத்தை
உருவாக்குவதில்தான் எதிர்க் கட்சி கூட்டணியின் வெற்றி உள்ளது. ஏனெனில், நெருக்கடி
நிலை அமல்படுத்தப்பட்ட பின்னணியில்தான் ஜனதா கட்சி உருவானது. மாபெரும்
மக்கள் இயக்கத்தை சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயண் நடத்தினார். இந்திய அரசியலில் புதிய மாற்றம்
உருவானது. அதுபோல, வி.பி.சிங் ஆட்சியின்போது, போபர்ஸ் ஊழல் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
எனவே, ஆளும் கட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் வகையில் சிறந்த கதையை உருவாக்காமல், வெறும் கூட்டணி கணக்கு மட்டும், மக்களின் ஆதரவைப் பெற்றுவிட முடியாது என்றார்.
0 Comments