அரசியல் சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டு...” - டெல்லி முதல்வர், ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இருவரும் அரசியல் சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டு ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அடுத்த தலைவரை இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒருமனதாக முடிவு செய்யுமாறு அறிவுத்தியுள்ளது.
டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் நியமனத்தை எதிர்த்து டெல்லி அரசு தாக்கல் செய்த மனுவை, மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான மனுவுடன் இணைந்து திங்கள்கிழமை (ஜூலை 17) விசாரிப்பதாக கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று அவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது, "இந்தச் சிக்கலை தீர்க்க எங்களிடம் ஒரு யோசனை இருக்கிறது. ஆளுநரும் முதல்வரும் இணைந்து ஒருவரை தேர்ந்தெடுக்க முடியுமா? பின்பு அவர் டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகட்டும்.
டிஇஆர்சி-யின் தலைவர் பெயரை இருவரும் ஒன்றாக ஏற்றுக்கொள்வதே சிறப்பானதாக இருக்கும். இந்த விஷயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அரசியலமைப்பு அதிகார பதவியில் உள்ள இருவருமே இதனைத் தீர்க்க வேண்டும். துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் இருவரும் ஒன்றாக அமர்ந்து தேவையானதை செய்ய வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
விசாரணையின்போது ஆம் ஆத்மி தலைமையிலான அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, டிஇஆர்சி தலைமை இல்லாமல் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த யோசனையைத் தெரிவித்தது. ஆளுநர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே நீதிமன்றத்தின் யோசனையுடன் உடன்படுவதாக தெரிவித்தார்
இதனிடையே, மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் தூஷர் மேதா, அவசர சட்டத்துக்கு பதிலாக வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு மசோதா ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறது என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்
முழு அவசர சட்டத்துக்கு எதிரான இரண்டாவது மனுவினையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றும் இந்த வழக்கினை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
0 Comments