Loading . . .




இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடி..! மக்களவையில் தகவல்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்


நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:- கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றிய மக்கள்தொகை மதிப்பீட்டுக்கான தொழில்நுட்ப குழுவின் அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய மக்கள்தொகை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதுபோல், கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 56 லட்சத்து 71 ஆயிரம் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.
2021-ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அரசிதழில் வெளியிட்டோம். இருப்பினும், கொரோனா பரவல் காரணமாக, கணக்கெடுப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டன.
சில அரசியல் கட்சிகள், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு எஸ்.சி., எஸ்.டி.யை தவிர, இதர சாதிகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இல்லை என்று அவர் கூறினார்.
இன்னொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் கூறியதாவது:- சில அதிகாரபூர்வமற்ற, அங்கீகாரம் பெறாத இணையதளங்கள், போலியாக இந்திய இ-விசாவை வழங்க முயன்று வருவதாக அவ்வப்போது எங்களுக்கு புகார்கள் வருகின்றன. அந்த இணையதளங்கள், அதிகாரபூர்வ விசா இணையதளங்கள் போன்றே காட்சி அளிக்கின்றன. அதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த இணையதளங்களை முடக்குமாறு 'செர்ட்-இன்' அமைப்பிடம் முறையிட்டுள்ளோம். கூகுள் நிறுவனத்திடமும் கூறியுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News