மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிநாமா: நீதிமன்றத்தில் முடிவை அறிவித்தார்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி
அமர்வு நீதிபதி ரோஹித் தேவ்,
தனது பதவியை வெள்ளிக்கிழமை
ராஜிநாமா செய்தார்.
நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள்
முன்னிலையில் தனது முடிவை
அறிவித்த அவர், 'சுயமரியாதைக்குப்
புறம்பாக என்னால் பணியாற்ற
முடியாது' என்று குறிப்பிட்டார்.
கடந்த 2022-ஆம் ஆண்டில்
மாவோயிஸ்டு தொடர்புடைய
வழக்கில் தில்லி பல்கலைக்கழக
முன்னாள் பேராசிரியர்
ஜி.என்.சாய்பாபாவுக்கு விதிக்கப்பட்ட
ஆயுள் சிறை தண்டனையை ரத்து
செய்ததுடன், வழக்கில் இருந்து
அவரை விடுவித்து தீர்ப்பளித்தவர்
நீதிபதி ரோஹித் தேவ்.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச்
சட்டத்தின்கீழ் செல்லத்தக்க அனுமதி
இல்லாமல், இந்த வழக்கு விசாரணை
நடைபெற்றிருப்பதாக தீர்ப்பில்
ரோஹித் தேவ் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்தத் தீர்ப்புக்கு தடை
விதித்த உச்ச நீதிமன்றம், வழக்கைப்
புதிதாக விசாரிக்க மும்பை உயர்
நீதிமன்றத்தின் நாகபுரி அமர்வுக்கு
உத்தரவிட்டது.
மாநில அரசின் முடிவுக்கு தடை
விதிப்பு: நாகபுரி-மும்பை விரைவுச்
சாலை பணியில் தொடர்புடைய
கட்டுமான ஒப்பந்ததாரர்கள்,
சாலையோரத்தில் சட்டவிரோதமாக
மணல் தோண்டி எடுத்ததாக
கூறி, அவர்கள் மீது வருவாய்த்
துறை தரப்பில் நடவடிக்கை
தொடங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை ரத்து செய்யும்
வகையில், மாநில அரசு அண்மையில்
முடிவு மேற்கொண்டது. இந்த முடிவை
செயல்படுத்த தடை விதித்து, நீதிபதி
ரோஹித் தேவ் கடந்த வாரம் உத்தரவு
பிறப்பித்திருந்தார்.
திடீர் ராஜிநாமா: இந்நிலையில்,
தனது பதவியை ராஜிநாமா
செய்வதாக நீதிமன்றத்தில்
வழக்குரைஞர்கள் முன்னிலையில்
அவர் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
தனது முடிவுக்கான காரணத்தை
குறிப்பிடாத ரோஹித் தேவ்,
'சுயமரியாதைக்குப் புறம்பாக
என்னால் பணியாற்ற முடியாது'
என்றும் மட்டும் கூறியதாக
வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக
கடந்த 2017, ஜூன் மாதம் பதவியேற்ற
ரோஹித் தேவின் பணிக் காலம், 2025
டிசம்பர் வரை இருந்தது.
நீதிபதியாக பதவியேற்பதற்கு
முன்பு, கடந்த 2016-இல் மகாராஷ்டிர
அரசின் தலைமை வழக்குரைஞராக
இவர் பணியாற்றினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments