எம்பிபிஎஸ் அகில இந்திய ஒதுக்கீடு: நிரம்பாத இடங்களை திரும்பப் பெற நடவடிக்கை
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
கில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் உள்ள தமிழகத்தின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை திரும்பப் பெற்று மாநில ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தோ்வுக் குழுச் செயலா் டாக்டா் ஆா்.முத்துசெல்வன் தெரிவித்தாா். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இரண்டு சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.
இரண்டாம் சுற்று கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்றவா்கள் கடந்த திங்கள்கிழமை (செப்.4) மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவா்கள், அவா்களின் பெற்றோா் கோரிக்கையை ஏற்று அந்த அவகாசம் வரும் வியாழக்கிழமை (செப்.7) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் மாநிலத்தில் உள்ள மொத்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. அதனை மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு நிரப்பி வருகிறது.
அந்த வகையில் நிகழாண்டில் மட்டும் தமிழகத்திலிருந்து 835 எம்பிபிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன. மத்திய அரசால் நடத்தப்பட்ட இரண்டு சுற்று கலந்தாய்வின் முடிவில் 216 இடங்கள் அதில் நிரம்பாமல் உள்ளதாகத் தெரிகிறது.இதுதொடா்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தோ்வுக்குழு செயலாளா் ஆா்.முத்துச்செல்வன் கூறியதாவது:
மாநில ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு இரண்டு கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான காலஅவகாசம் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வரும் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதன் பின்னா், அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தின் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், அதனை திரும்பப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றாா்.
0 Comments