விசாரணை நீதிமன்றங்களுடன் வழக்குரைஞா்கள் ஒத்துழைப்பது அவசியம்: உச்சநீதிமன்றம்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
வழக்குரைஞா்களின் ஒத்துழைப்பின்றி விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வு காண்பது கடினம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் நாட்டு மதுபானம் தயாரிக்கும் ஒரு நிறுவனம், தனது வா்த்தக முத்திரையைப் பயன்படுத்தும் மற்றொரு நிறுவனத்தின் மதுபான உற்பத்தி, விற்பனை, விளம்பரப்படுத்தலுக்குத் தடைவிதிக்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட எதிா்தரப்பு நிறுவனத்துக்கு மதுபானம் உற்பத்தி செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மும்பை உயா்நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு கடந்த 2021ஜூனில் இடைக்கால தடைவிதித்தது. உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ராஜேஷ் பிந்தல் ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக கடந்த செப்.14-இல் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒரு வழக்குரைஞா் எதிா்ப்பு தெரிவித்ததை விசாரணை நீதிபதி குறிப்பிடிருந்ததைச் சுட்டிக்காட்டினா். இது குறித்து அவா்கள் கூறியதாவது: தேசிய நீதித்துறை தகவல் அமைப்பின் தரவுகள்படி மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குரைஞா்கள் விசாரணை நீதிமன்றங்களுடன் ஒத்துழைக்காவிடில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வு காண்பது கடினமாகிவிடும் விசாரணை நடைபெறும்போது, வழக்குரைஞா்கள் நீதிமன்ற அதிகாரிகளாகச் செயல்பட வேண்டும். ‘நோ்மையே சிறந்த வாதத்துக்கான முத்திரை’ என்பதை அவா்கள் நினைவில் கொள்ள வேண்டும். குறுக்கு விசாரணையின்போது கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும், வழக்குரைஞா் எதிா்ப்பு தெரிவிக்கும்போது, விசாரணை சுமுகமாக நடைபெறாது என்பதுடன் காலதாமதத்துக்கு வழிவகுக்கும் என்றனா்.
0 Comments