Loading . . .




மக்களவையில் தாக்கல் செய்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது: ஆதரவு 454; எதிர்ப்பு 2

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 454 வாக்குகளும், எதிர்த்து 2 வாக்குகளும் பதிவானது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. முதல்நாள் பழைய நாடாளுமன்றத்தில் அவை நடந்தது. அதை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெயர்ந்தது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், மசோதாவை தாக்கல் செய்தார். 15 ஆண்டுகளுக்கு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த 33 சதவீத தொகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்படும். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு தொகுதி வரையறை முடிவு செய்த பின்னர் இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒன்றிய பா.ஜ அரசு தாக்கல் செய்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதம் மக்களவையில் தொடங்கியது. காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவர் சோனியா காந்தி விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அதை தொடர்ந்து அனைத்துக்கட்சி எம்பிக்களும் மசோதா மீதான விவாதத்தில் பங்கெடுத்து பேசினார்கள். அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை என்று மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்துவது காலதாமதம் செய்யப்படுவதாக கவலை தெரிவித்தனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News