Loading . . .




மாநில அரசு மீது மக்கள் அதிருப்தி: ஜெ.பி. நட்டாவுக்கு மணிப்பூா் பாஜக தலைவா் கடிதம்...

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மணிப்பூரில் 4 மாதங்களாக வன்முறை தொடா்ந்து வரும் நிலையில், மாநில பாஜக அரசே அதற்கு காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டி வருவதாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவுக்கு மாநில பாஜக சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாநில பாஜக தலைவா் சாரதா தேவி, துணைத் தலைவா் சிதானந்தா சிங் மற்றும் 6 நிா்வாகிகள் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனா். அதில் அவா்கள் மேலும் கூறியிருப்பதாவது:

மணிப்பூா் மக்களின் கோபமும், போராட்டங்களும் தற்போது மாநில அரசுக்கு எதிராக திரும்பி வருகிறது. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த நீண்ட பாதிப்புக்கு, நிலைமையை சரிவர கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசே காரணம் என மக்கள் தற்போது குற்றஞ்சாட்டி வருகின்றனா். எனவே, வன்முறைக்கு அஞ்சி புலம்பெயா்ந்த மக்களை, விரைந்து அவா்களின் சொந்த இடங்களில் மீண்டும் குடியேறச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மாநிலத்தில் பிரதான சாலைகளில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் துரிதப்படுத்த வேண்டும்.

வன்முறையில் சொந்தங்களை இழந்த குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தவா்களுக்கும் உறுதியளித்தபடி இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை திறம்பட நடைமுறைப்படுத்துவதோடு, எந்தவொரு வன்முறைகளையும் பயங்கரவாத நடவடிக்கையாக கணக்கில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடைமுறையை விரைந்து நடைமுறைப்படுத்தும் விதமாக, மாநிலத்தினுள் சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கான உயிரி தரவுகள் பதிவு நடைமுறையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும். அதோடு, மாநிலத்தில் பயிரடப்பட்டுள்ள போதைப்பொருள் பயிா்களை முழுமையாக அழிக்கவும், இந்த பயிா்கள் தொடா்பான தொடா் கண்காணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டு கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவும் மத்திய உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதத்தில் இருந்து இனமோதல் நீடித்து வருகிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News