5ஜி இணையசேவை: சா்வதேச இணைய வேக தரவரிசையில் 47-ஆவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!...
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
இந்தியாவில் 5ஜி இணையசேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் எதிரொலியாக உலகளாவிய இணையவேக பரிசோதனை குறியீட்டில் இந்தியா 47-ஆவது இடத்துக்கு முன்னேறியிருப்பதாக இணைய வேக பரிசோதனை தளமான ‘ஓக்லா’ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜியோ மற்றும் ஏா்டெல் நிறுவனங்களால் 5ஜி இணையசேவை அறிமுகப்படுத்தப்பட்டன. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்தியாவின் இணைய வேக செயல்திறன் 3.59 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் விநாடிக்கு 13.87 எம்.பி.யாக ஆக இருந்த சராசரி பதிவிறக்க வேகம் கடந்த ஆகஸ்டு மாதத்தில் விநாடிக்கு 50.21 எம்.பி.யாக உயா்ந்துள்ளது.
இதன்மூலம், உலகளாவிய இணையவேக பரிசோதனை குறியீட்டில் (ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இண்டெக்ஸ்) 119-ஆவது இடத்திலிருந்த இந்தியா 72 இடங்கள் முன்னேறி 47-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை இந்தியா இந்தப் பட்டியலில் முந்தியுள்ளது.
மற்ற ஜி20 நாடுகளான மெக்சிகோ 90-ஆவது இடத்திலும், துருக்கி 68-ஆவது இடத்திலும், பிரிட்டன் 62-ஆவது இடத்திலும், ஜப்பான் 58-ஆவது இடத்திலும், பிரேசில் 50-ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 48-ஆவது இடத்திலும் உள்ளன.
இது தொடா்பாக ஓக்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் 5ஜி சேவைக்கான சந்தாதாரா்கள் கணிசமாக அதிகரித்துள்ளனா். 5ஜி சேவையானது வேகமான இணையவசதியை மட்டுமின்றி வாடிக்கையாளா்களுக்கு அதிக திருப்தியையும் தருகிறது. அனைத்து தொலைத்தொடா்பு வட்டங்களிலும் பயனா்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை 5ஜி சேவை மேம்படுத்தியுள்ளது.
4ஜி சேவை பயனா்களை ஒப்பிடும்போது 5ஜி சேவை பயனா்கள் தங்கள் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமாக மதிப்பீடுகளை வழங்குகின்றனா். ஃபைபா் கேபிள்களைப் பதித்து பிராட்பேண்ட் இணைப்பை வழங்க சாத்தியமில்லாத அல்லது செலவு அதிகமாகும் பகுதிகளில் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments