Loading . . .




காந்தி நினைவிடத்தில் திரிணமுல் போராட்டம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து, மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகளுடன் சேர்ந்து, மேற்கு வங்க அமைச்சர்களும், திரிணமுல் எம்.பி.,க்களும் நேற்று புதுடில்லியில் உள்ள மஹாத்மா காந்தி நினைவிடத்தில் போராட்டம் நடத்தினர். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு, மத்திய அரசு சார்பில் முறையாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

மத்திய அரசின் செயல்பாட்டை கண்டிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பயனாளிகளுடன், திரிணமுல் காங்., அமைச்சர்கள், எம்.பி.,க்களுடன் புதுடில்லி சென்று, இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். இதன்படி, புதுடில்லியில் மஹாத்மா காந்தியின் நினைவிடத்தில், திரிணமுல் காங்., பொதுச்செயலர் அபிஷேக் பானர்ஜி தலைமையில் மாநில அமைச்சர்கள், எம்.பி.,க்கள், அங்கு அமர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்க, முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டு இருந்தார். எனினும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி, 10 நாட்கள் ஓய்வில் இருந்து வருகிறார். இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் ஆளும் அரசின் செயல்பாட்டை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவரும், மாநில பா.ஜ.,வின் மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை நுழைவாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News